தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2024ல் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இவரது அரசியல் பிரவேசம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்க்கும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 2021ஆம் ஆண்டு இந்த உறவைக் கண்டுபிடித்ததாகவும், அதனை முறித்துக் கொள்வதாக விஜய் வாக்குறுதி அளித்தும் தொடர்ந்து அந்த உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தான் மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், 2021 முதல் விஜய் தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்தியதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை தனியாக வாழ நிர்ப்பந்தித்ததாகவும், அந்த நடிகை விஜயுடன் வெளிநாடுகளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் கேள்வி கேட்டதால் வீட்டில் தனக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள சங்கீதா, தேவைப்பட்டால் அந்த நடிகையை இரண்டாவது மனுதாரராக சேர்ப்பதாகவும், நெருக்கடி ஏற்பட்டால் கள்ள உறவுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், விஜயின் மனைவி தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக தலைவர் விஜயின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சதி செய்வதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்-த்ரிஷா தொடர்பு குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவர் வருத்தம் தெரிவித்ததும், த்ரிஷா கண்டனம் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவாகரத்து மனுவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள விஜய் தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு புகாரின் அடிப்படையில் மட்டுமே உண்மை இதுவென முடிவுக்கு வர முடியாது என்பதால், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விஜய் தரப்பு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















