தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய், பழங்களை போன்று மளிகை பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தினசரி 35 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. இறப்பு எண்ணிக்கையும் 400- ஐ தாண்டி வந்தது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது.
மளிகை பொருட்கள்
இந்த ஊரடங்கில் மளிகை பொருட்களுக்கு மட்டும் தளர்வுகளை விதித்துள்ளது. அதாவது தள்ளுவண்டி, வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யப்படுவது போல் மளிகை பொருட்களும் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மளிகைக் கடை வியாபாரிகள்
இதன்மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் இன்று முதல் தெருத்தெருவாக சென்று மளிகை பொருள்களை விற்பனை செய்யலாம். கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் அனுமதி பெற வேண்டும்.
கடை நடத்துதல்
இதற்காக லைசென்ஸ் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்து சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விட வேண்டும். இல்லாவிடில் செல்போன் மூலமும் மளிகைப் பொருட்கள் குறித்த விவரங்களை கடைகளுக்கு தெரிவிக்கலாம்.
பொதுமக்கள்
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல கடைகளை முழுவதுமாக திறக்க கூடாது. அதற்கு பதிலாக பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க வாயிலாக பொருட்களை எடுத்து சென்று வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்.
வியாபாரிகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து நேற்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் தொலைபேசி எண்கள் www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்-அப் நம்பர்கள் போன்ற முழு விவரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.





















13 thoughts on “தமிழகத்தில் காய்கனிகளை போல் இன்று முதல் மளிகை பொருட்களும் டோர் டெலிவரி.. புதிய தளர்வுகள் என்ன?”
Comments are closed.