இலுமினாட்டிகள் போல் செயல்படும் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி அமைப்பா என்ற கேள்விக்கு அதன் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் உலகளாவிய சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் தேசிய தலைவர் குத்தா கிருஷ்ணன் செல்வராஜன் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இலுமினாட்டி இல்லை என்று கூறினார். சேவை மனப்பான்மையோடு செயல்பட்டுவரும் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு, தங்களுடைய சேவைகள் தொடர்பாக ரகசிய கூட்டங்கள் நடத்துவது உண்மைதான் என்று தெரிவித்தார். ஆனால், இலுமினாட்டிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உறுதிபட கூறினார்.
சேவை, தலைமைத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 300 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட ஃப்ரீமேசன்ஸ் அமைப்பினர், ஆண்டுதோறும் ஜூன் 24 அன்று கடைபிடிக்கப்படும் ‘சகோதரத்துவ தினத்தை’ கொண்டாடுவதற்காக புதன்கிழமையன்று சென்னையில் ஒன்றுகூடினர். சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள ‘ரீஜினல் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் சதர்ன் இந்தியா’ (Regional Grand Lodge of Southern India) வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விவேகானந்தர், நேரு, ராஜாஜி உட்பட பல முக்கிய முன்னோடிகள் உறுப்பினராக இருந்த இந்த அமைப்பில் இந்தியாவின் பல முக்கியத் துறைகளில் பங்காற்றிவரும் பிரபலங்கள் இன்றும் செயல்பட்டுவருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் கூறிய ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் கிராண்ட் மாஸ்டரும் தேசியத் தலைவருமான குத்தா கிருஷ்ணன் செல்வராஜன், ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் சிறப்பான வரலாறு மற்றும் நிலைத்திருக்கும் விழுமியங்கள் குறித்து கூறினார். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக உறுப்பினர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் சேவை, தலைமைத்துவம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை இந்த அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
சமூக சேவை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாக ‘சகோதரத்துவ தினம்’ கொண்டாடப்படுவதாகக் கூறினார்.
மூத்த ஃப்ரீமேசன்ஸ் உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், சமூகத்திற்கு இவ்வமைப்பு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் தலைமைத்துவம் மற்றும் தொண்டு முயற்சிகளை வளர்ப்பதில் அதன் பங்கு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன. முன்னதாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கு ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் ரகசிய இடமான கோயிலில் பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் ரகசிய உறுதிமொழிகளும் வழிபாடுகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மதத்தின் மூத்த துறவி, சுவாமி சாந்தா சித்தானந்த மகாராஜ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர். பாரதி பாஸ்கரின் பேச்சு அரங்கத்தை அதிரவைத்தது.


















