வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற உள்ளதாக சென்னை சூளை தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

சென்னை சூளை, அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை இந்து அறநிலையத் துறையினர் நேற்று சீல் வைத்தனர். இதையடுத்து தட்டான்குளம் பகுதியில் குடியிருப்போர் உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து ஒன்று திரண்டனர். பின்பு காவல் துறை உயர் அதிகாரிகள் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் பேச்சு வார்த்தை நடத்த அழைத்த காரணத்தால் போராட்டத்தை கைவிட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவியது. மேலும் தட்டான்குளம் பகுதி மற்றும் அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதனை தொடர்ந்து பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஆர்.டி.பிரபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, எங்கள் பகுதி அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தம் இல்லை என்றும் அந்த இடம் நத்தம் பொறும்போக்கு என்றும் ஆகையால் எஙலகள் நிலத்துக்கு பட்டா கேட்டு கோரிக்கை வைத்தோம்.

திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பட்டா வாங்கி தருவதாக உறுதி அளித்த காரணத்தால் திமுகவுக்கு வாக்கு அளித்தோம்.

ஆனால், எங்கள் வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அதற்கு முன்பு வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Author: ADmiNIstRAtoR