முத்தரப்பு குழு அமைத்து உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
சென்னை, 30 மார்ச் 2023: ‘‘வழிகாட்டி மதிப்பு 33% உயர்வை திரும்பப் பெறுங்கள்’’ என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் –- தேசிய தலைவர் ஆ.ஹென்றி, முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:–
2023-–2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் 3வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர், பட்ஜெட் வரைவில் பதிவு கட்டணத்தை 4%த்தில் இருந்து 2% ஆக குறைப்பு என்கிற திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் உள்ளபடியே இந்த அரசை நம்பி வாக்களித்த மக்களுக்கும், சொத்துக்களை வாங்குகின்ற பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டம்.
இதன் மூலம் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை பெருமளவில் மேலும் வளர்ச்சியும் எழுச்சியும் அடையும். பதிவுகளின் எண்ணிக்கையும் உயரும், பதிவு துறைக்கும் வருவாய் அதிகரிக்கும். ஆகவே பதிவுக் கட்டணம் 2% குறைப்பு என்கிற திட்டத்தை எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் உளமாற வரவேற்கின்றோம். இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், நிதியமைச்சகதுக்கும், பதிவு துறைக்கும் எங்களது இதயப் பூர்வமான வாழ்த்துக்களையும், உளமார்ந்த பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே சமயம் இந்த 2023-–2024 பட்ஜெட் வரைவில் எதிர் வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அரசு நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பினை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ந் தேதி அன்று அரசால் குறைக்கப்பட்ட 33 சதவிகிதத்தை மீண்டும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வரைவு செய்தி, விரைவாக பொதுமக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் மத்தியிலும் ஒருவிதமான அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம் வழிகாட்டி மதிப்பு உயர்வின் மூலம் இனி பதிவுச் செலவு கணிசமாக உயரும் (அதாவது மூன்றில் ஒரு பங்கு உயரும்) இதனால் வருமான வரி பிரச்சனை ஏற்படும், மூலதன ஆதாய வரி உயரும் (TDS). வருமானத்தின் மீதான வரி பிடித்தம் உயரும் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சொத்துக்களை வாங்குகின்ற பொதுமக்களும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்களும் சந்திக்க நேரிடும்.
மேலும் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ந் தேதிக்கு பிறகு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்துள்ள வீட்டுமனை பிரிவு உள்ளிட்ட இனங்களுக்கு இந்த பட்ஜெட் வரைவு திட்டத்தில் என்ன நிலைg;பாடு என்பதும் தெரியவில்லை.
மொத்தத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ள பதிவு கட்டணம் 2% குறைப்பு திட்டம் சொத்துக்களை வாங்குகின்ற பொது மக்களுக்கு துளியும் பயன் தராது. மாறாக பெரும் சுமையை பல வகையிலும் ஏற்படுத்தும்.
மேலும் இந்த அரசை நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஆகவே முதலமைச்சர் இப்பிரச்சனைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, அரசு நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பை பொத்தம் பொதுவாக வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் 33% உயர்த்துவதை தவிர்த்து, நிதியமைச்சர் பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பு 33% உயர்வு என அறிவித்துள்ளதை திரும்பப் பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு தரப்பில் ஒரு முத்தரப்பு குழுவினை அமைத்து, பகுதி வாரியாக நிலங்களை நேரில் பார்வையிட்டு, முத்தரப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எங்கெல்லாம் அரசு நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருக்கிறதோ, அதனை கண்டறிந்து அந்தப் பகுதியில் மாத்திரம் வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதற்கான முடிவையும், உத்தரவையும் தாங்கள் பொதுமக்கள் நலன் கருதி பிறப்பிக்க வேண்டும்’’.
இவ்வாறு ஆ.ஹென்றி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.





















6 thoughts on “‘‘வழிகாட்டி மதிப்பு 33% உயர்வை திரும்பப்பெறுங்கள்’’: ஸ்டாலினுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஆ.ஹென்றி கடிதம்”
Comments are closed.