மனிதனின் முதல் அறிவியல் கண்டுப்பிடிப்பு சக்கரம் என்றால் அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டமாகும். உலோக பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதும் மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. நமது அன்றாட வாழ்வில் மீண்டும் மண்பாண்டங்களை புழக்கத்துக்கு கொண்டு வருவது எப்படி? என்று யோசித்தபோது…. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம.லோகேஷ் என்ற இளைஞர் மண்பாண்டத் தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது….
மண்பாண்டம் உள்பட மரபுத் தொழில்களை மீட்க பிரத்யேகமான கல்வி முறை, வியாபார யுக்திகள் தேவைப்படுகிறது. மண்பாண்டத் தொழிலை பயிற்றுவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. மண்பாண்டம் உள்ளிட்ட அனைத்து மரபுத் தொழில்களுமே ஏதோ ஒரு சாதிய அடிப்படையிலான தொழிலாக இருக்கும். குறிப்பாக மண்பாண்ட தொழிலை குயவர்கள் அல்லது குலாலர் என்ற சாதியினர் செய்து வருகின்றனர். மாண்பாண்ட தொழிலை பிற சாதியினர் கற்பதில் மன தடையுள்ளது.
ஆனால், சாதிய கட்டமைப்புக்குள் சிக்கியதால் தான் மண்பாண்டத் தொழில் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. சாதிய கட்டமைப்பில் இருந்து விடுபட்டு நிறுவன மயமாக்கப்பட்டத் தொழில்கள் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே நிதர்சனம்.
எடுத்துக்காட்டாக செருப்பு தயாரிப்பதை சக்கிலியர் என்ற சாதியினர் செய்து வந்தனர். ஆனால், பாட்டா, பாரகான் என்று நிறுவனமயக்கப்பட்டதால் செருப்பு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மர வேலைபாடுகளை தச்சர் சாதியினர் செய்து வந்தனர். தற்போது, இனட்டிரியர் டிசைன் என்று நிறுவன மயக்கப்பட்டு வளர்ந்துள்ளது.
இதேபோல், மண்பாண்ட தொழிலும் நிறுவன மயக்கமாக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களின் இல்லங்களிலும் மண்பாண்ட பயன்பாட்டை உறுதி செய்ய முடியும்.
தற்போது மண்பாண்ட கற்றலுக்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. தற்போது இத்தொழிலை செய்து வருபர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு இருக்கமாட்டார்கள். இத்தொழிலை புதிதாக கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி இல்லை, மண்பாண்ட தொழில் மூலமாக போதுமான வருவாய் ஈட்ட முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. அதாவது மனித நாகரீகத்தின் ஆதித் தொழிலாக இருந்த மண்பாண்டம் இன்று அந்திம காலத்தில் உள்ளது. மண்பாண்டங்களை கையால்; தொடும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.
மண்பாண்ட செய்ய களிமண், சவுடு மணல் சேகரித்து வைத்தல், களிமண்ணை சலித்தல், மண்ணை மிதித்து பதப்படுத்துதல், மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்தல், கடைசியாக சூலையிடுதல் உள்ளிட்டவற்றிற்கு ஒரு நபருக்கு குறைந்தது 10 சென்ட் நிலமாவது தேவைப்படும். அந்த அளவு நிலம் வைத்துக்கொண்டு தொழில் தொடங்கும் நிலையில் யாரும் இல்லை. எனவே மண்பாண்டத் தொழில்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.
இதில், மண்பாண்டத் தொழிலுக்கான இலவச பயிற்சி கூடம், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கான பொது களம், பொது மின் மண் பிசையும் இயந்திரம், பொது மின் சூளை அடுப்பு, பொது விற்பனை களம், மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் உலகத்தின் மிகப்பெரிய 20 அடி உயரத்துக்கு களிமண் பானை உருவாக்கி கின்னஸ் சாதனை செய்தல். அதை சுற்றி பூங்காவும், பூங்காவை சுற்றி மண்பாண்ட கடைகள் மற்றும் மண்பாண்ட சமையலில் பெருமையை விளக்கும் வகையில் மாதிரி மண்பாண்ட சமையல் கூடம் அமைக்கப்படும்.
இதுமட்டுமின்றி ஆன்லைன் மணபாண்ட விற்பனை ஆப் உருவாக்குதல், வேலூர் மாவட்டம் முழுவதும் மண்பாண்ட விற்பனை நிலையங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது.
இதை உருவாக்குவதற்கான நோக்கம் பொது இடத்தில் பொருட்களை விற்பனை செய்வது போலவே தயாரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக மண்பாண்டங்களை சூளையிடுவதற்கு குறிப்பிட்ட நிலம் தேவைப்படும். குடியிருப்பு பகுதியில் சூளையிடுவதால் உருவாகும் புகை மற்றவர்களுக்கு இடையூராக இருக்கும். ஒவ்வொரு தனிநபர்களும் தனி இடம் தேடி அளைவதைவிட, பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இடத்தை சுழற்சி முறையில் அனைவரும் பயன்படுத்தலாம்.
இங்கு வருபவர்கள் ஒரு மரபுத் தொழிலை கற்பது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, சந்தைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வகையிலும் புலமைப்பெற்றவராக இருப்பார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கற்று தந்தாலே போதுமானது, அவரே மற்ற உறுப்பினர்களுக்கு தொழிலை கற்றுதரலாம்.
மண்பாண்டம் உள்பட மரபுசார்ந்த தொழிலை கற்பித்து ஊக்கப்படுத்துவதால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், அவரவர் வாழ்விடத்திலேயே தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படும், அந்ததந்த வட்டாரத்தின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும், மரபு வழியில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எப்போதுமே ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் உண்டு, சுயதொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இடைதரகர்கள் இன்றி உற்பத்தியாளரே விற்பனையாளராக இருப்பதால் உழைக்கும் மக்களுக்கான அங்கிகாரம் உறுதி செய்யப்படும்.
மண்பாண்ட தொழிலை மீட்பதால் கிடைக்கும் நீண்ட கால நண்மைகளில் முதன்மையான ஆரோக்கியமான மனித சமூதாயத்தை உருவாககுவதே.
சமீபகாலமாக 30 வயதை கடந்தவர்களுக்கு அல்சர் என்னும் குடல்புண் பாதிப்பு சர்வ சாதாரனமாக தென்படுகிறது. பசிக்கும் நேரத்தில் உணவை தவிர்ப்பதே அல்சர் உண்டாக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தினந்தேறும் நேரம் தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு கூட அல்சர் பாதிப்பு வரும். அதற்கு உலோகப் பாத்திரங்களில் சமைப்பதும் ஒரு காரணம். ஒரு அலுமினிய பாத்திரத்தை வாங்கிவிட்டால் குறைந்தது 10 வருடமாவது பயன்படுத்துகிறோம். வாங்கும்போது ஒரு கிலோ இருக்கும் அலுமினியப் பாத்திரம் 10 வருடங்களுக்கு பிறகு 950 கிராம் இருக்கும் என்றால், அந்த தேய்மானம் நமது உணவில் தானே கலந்திருக்கும். குறிப்பாக பிரியாணி கடைகளில் கரண்டியால் சுண்டுபோது ஏற்படும் கீரலால் விழும் துகள்கள் உணவில் தானே கலக்கும். இது அளவில் சிறியது என்றாலும் ஏற்படுத்தும் பாதிப்பு பெரியது.
இதையெல்லாம் மனதில் கொண்டு மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கம் என்ற எனது எண்ணத்தை ஓர் திட்ட அறிக்கையாக தயார் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முக சுந்தரம் அவர்களிடம் வழங்கினேன். அதைய ஏற்ற அவர், 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக கூறியதோடு அதற்கான அலுவல் ரீதியா கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.


இவ்வாறு அமைந்தால் வேலூர் கோட்டை, சி.எம்.சி.மருத்துவமனை, வி.ஐ.டி.பல்கலைக்கழகம், தங்க கோயில் வரிசையில் வேலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மண்பாண்ட தொழிலுக்காக அமைக்கப்படும் உலகின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இருக்கும். இவ்வாறு ம.லோகேஷ் கூறினார்.
“பனை எழுத்துக்கள் இலக்கியமானது,
பானை எழுத்துக்கள் வரலாறானது.” என்ற சொல்வழக்கிற்கு ஏற்ப மண்பாண்ட தொழிலை கற்பித்து மீட்பது என்பது ஒரு தொழிலுக்கு புத்துயிர் அளிக்கம் செயல் மட்டுமல்ல, மனித நாகரீகத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வாழ்வியல் புரட்சி.

சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்ற ம.லோகேஷ். அதே கல்லூரியில், காட்சி தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் என்ற விருதையும் வென்றுள்ளார். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான “உயிர் உலை” என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான “ஈழம்-87” என்ற புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். சாலை விபத்தில் இறந்த நிருபர் ஷாலினியின் கவித்தைகளை தொகுத்து “பாரதியாழ்” என்ற அவரது புனைபெயரிலேயே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















5 thoughts on “மண்பாண்டத் தொழிலை மீட்டெடுக்க வேலூர் இளைஞரின் புது முயற்சி”
Comments are closed.