ஆன்லைனில் விளம்பரம் | QR code அனுப்பினார் | ரூ.34,000 அபேஸ் | கெஜ்ரிவால் மகள் அதிர்ச்சி

‘லிங்கை ஸ்கேன் செய்யுங்கள், பணம் உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்’ என்று மோசடி கும்பல் கூறியதை நம்பி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஸ்கேன் செய்தபோது 34 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. இதனால் வீட்டில் இருந்தபடியே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும், பலர் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கிறது OLX. இந்த ஆன்லைன் நிறுவனத்தை நம்பி பலர் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மோசடி கும்பல் மக்கள் ஏமாற்றி வருகிறது. விவரம் தெரியாதவர்களை குறிவைத்து ஏமாற்றி வந்த இந்த கும்பல் தற்போது படித்தவர்களையும் ஏமாற்றி வருகிறது.

இதற்கு உதாரணம் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா. இவர் தங்கள் வீட்டில் இருந்த பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல ஆன்லைன் விற்பனை தளமான OLX-இல் விளம்பரம் செய்திருந்தார். இதனைப் பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகியுள்ளார். அப்போது சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து, ‘லிங்கை ஸ்கேன் செய்யுங்கள், பணம் உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்’ என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதை நம்பி அவர் ஸ்கேன் செய்ய, ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 பணம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆனது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா அந்த நபரிடம் தன்னிடமிருந்து பணம் டிரான்ஸ்பர் ஆனது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், தான் தவறான பார் குறியீட்டை அனுப்பி விட்டதாகவும், மற்றொரு பார் கோடை அனுப்பி, பணத்தைப் பெறுவதற்கு அதே நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டார். அவர் பார் கோடை ஸ்கேன் செய்தபோது, ஹர்ஷிதா மேலும் ரூ.14,000 பணத்தை இழந்தார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஹர்ஷிதா, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

Author: ADmiNIstRAtoR