வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருக்கு பெயிரா கோரிக்கை கடிதம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் திருமதி.ஜோதி நிர்மலாசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் கடந்த 27.07.2023 அன்று மாநிலம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற “பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில்” FAIRA சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிலவற்றில் பகுதி தீர்வினை ஏற்படுத்தி, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் பிரிபடாத பாக சொத்து மதிப்பிற்கு ஒரு ஆவணமும், கட்டிடத்திற்கென தனியாக ஒரு ஒப்பந்த ஆவணமும் ஆக இரு ஆவணங்களாக இதுவரை பதிவு செய்து வந்த நடைமுறையை மாற்றியமைத்து,

எதிர்வரும் 01.12.2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தற்போது மனை மற்றும் கட்டிடத்துடன் கூடிய மதிப்பிற்கு ஒரே ஆவணமாக பதிவு செய்யும் வகையில், முதலில் பதிவு செய்யப்படும் 50 லட்சம் மதிப்புக்குள் உள்ள பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் 4% சதவிகிதம் முத்திரை தீர்வை மற்றும் 2% சதவிகிதம் பதிவு கட்டணம் உட்பட 6% சதவிகிதம் எனவும்,
அதேபோன்று 50 லட்சத்துக்கும் மேல் 3 கோடி மதிப்புக்குள் உள்ள முதலில் பதிவு செய்யப்படும் பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் முத்திரை தீர்வை 5% சதவிகிதம் மற்றும் பதிவு கட்டணம் 2% சதவிகிதம் உட்பட 7% சதவிகிதம் எனவும், அறிவித்து செய்தி வெளியீடு எண். 2332/2023 ஆக அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ள தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவு துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் முடிவுற்ற திட்டங்களுக்கு மொத்த விற்பனை தொகையையும் வாடிக்கையாளருக்கு வங்கி கடன் கொடுக்கும், அந்த அடிப்படையில் இந்த திட்டம் பொருந்தும்.

நடப்பு திட்டங்களுக்கு கட்டுமானப் பணியின் அடிப்படையில் படிப்படியாக தான் வங்கி கடன் கொடுக்கும், அப்படி பட்டவர்களுக்கு இந்த திட்டம் எப்படி பொருந்தும், வீட்டினை கட்டி முடிப்பதற்கு முன்பே பகுதி தொகையை செலுத்தி முன் பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு கட்டுனர் எப்படி மனை மற்றும் கட்டடத்துடன் பதிவு செய்து கொடுக்க முடியும். இப்படி பதிவு செய்து கொடுத்தால் கட்டுனருக்கு எப்படி அவருக்கு சேர வேண்டிய பணத்திற்கான பாதுகாப்பு இருக்கும், இதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் அறிவார்ந்த பதிவு துறை தெளிவு படுத்த வேண்டும்.

அதே வேளையில் மேற்கண்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டுனர்களால் அபிவிருத்தி செய்யபட்டு முதலில் பதிவு செய்யப்படும் மனைப்பிரிவு மற்றும் தனி வீடு குடியிருப்பு திட்டங்களுக்கும், மேற்கண்ட வகையில் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் பொருந்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும்,

மேலும் 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என்ன முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் என்கிற தெளிவுரையை வழங்கிட வேண்டுமெனவும்,

ரியல் எஸ்டேட் துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் எனவும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம் எனவும் அறிவித்து உடனடியாக குறைத்து நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் பெயிரா தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி பதிவுத்துறை செயலாளர் திருமதி.ஜோதி நிர்மலாசாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Author: ADmiNIstRAtoR