நீட் விலக்கு, கச்சத்தீவு மீட்பு, தமிழ் அலுவல் மொழி – மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடிதொடங்கி வைக்கவுள்ளார்.

இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் சென்றார். இதனிடையே, அடையாறில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

அடிக்கல் நாட்டு விழாவின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் சமூகநீதியையும் உள்ளடக்கியது. மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு அதிகரித்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர இதுவே தக்க தருணம்.

கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவைத்தொகையான 14.000 கோடி ரூபாயை விரைவாக வழங்கிட வேண்டும். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

~ நியூஸ் 18 தமிழ்

Author: ADmiNIstRAtoR