இந்திய உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை (AHPI-TN) கண்டனம்

சென்னை மருத்துவரின் உடல்அடக்கம் மறுக்கப்பட்டதை வலுவாக கண்டிக்கும் இந்திய உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை (AHPI-TN), துரித நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துகிறது

மருத்துவர்களுக்கும் மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எதிராக பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் நிகழும் வன்முறை சம்பவங்களை இந்திய உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் (AHPI-TN) தலைவர் டாக்டர்.எஸ். குருசங்கர் வன்மையாக கண்டனம் செய்திருக்கிறார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பணியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டதற்குப் பிறகு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். சைமன் ஹெர்குலஸ் அவர்களது உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட அனுமதி மறுத்த நேற்றைய வன்முறை சம்பவம் மனிதநேயத்தை குழிதோண்டி புதைத்ததற்கு நிகரானது என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொடுமையான நோயிலிருந்து மக்களை காப்பாற்றுகின்ற சீரிய பணியில் ஈடுபட்டதன் காரணமாக இம்மருத்துவர் உயிரிழந்தார் என்பதை எப்படி நாம் மறக்கமுடியும்? தேசத்திற்காகவும், தேசத்தின் மக்களுக்காகவும் தன்னுயிரை ஈந்த தியாகச்செம்மல் என்றல்லவா உயிரிழந்த அந்த மருத்துவர் போற்றப்பட வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“நெருக்கடியான, உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதை அறிந்தும் தயங்காது பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாக்கப்படுவதும், எச்சில் துப்பி அவமானப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்தாலும் எங்களது பொறுமையையும், மனிதநேயத்தையும் இழக்காமல் முடிந்தவரை எண்ணற்ற உயிர்களை காப்பதற்காக மருத்துவர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி சேவையாற்றி வருகின்றனர்.

இத்தகைய கடுமையான சூழலில் மருத்துவ சமூகத்தினர் மீது இத்தகைய அவமானமும், கொடுமையும் இழைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கேட்பது மாலை மரியாதைகளோ, கௌரவங்களோ, விருதுகளோ அல்ல் அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியத்தைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் அவர்களது கடமைகளை முறையாக செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

அத்தியாவசியமான பாதுகாப்பு சாதனங்கள் போதுமான அளவு இல்லையென்ற போதிலும் கூட கோவிட்-19 தொற்றை எதிர்த்து நமது நாட்டின் மருத்துவர்களும், செவிலியர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் மற்றும் தூய்மை பணியாளர்களும் தளராது போராடிக்கொண்டிருக்கின்றனர். சுயநலமின்றி மக்கள் நலனை உறுதிசெய்ய தங்கள் பணியை ஆற்றும்போது இத்தொற்றின் காரணமாக தங்களது உயிரையும் இழந்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் இயல்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இப்போது வருவாய் என்பது இல்லை. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட கடும் சிரமப்படும் நிலையை பல மருத்துவமனைகள் எட்டியிருக்கின்றன. ஊதியத்தை வழங்குவதற்கு பல மருத்துவமனைகள் கடன்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த துயரமான, நெருக்கடியான நிலையில் சுகாதார சேவை அவசியப்படுகின்ற அனைவருக்கும் எங்களது உதவிக்கரம் நீள்கிறது.

சமுதாயத்தின் மீதான பொறுப்புறுதியினால் மருத்துவர்கள் தன்னலமற்ற இந்த பணியை செய்கின்றனர் என்பதையாவது குறைந்தபட்சம் பொதுமக்கள் உணரவும், அங்கீகரிக்கவும் வேண்டும் என்பதே எனது அழுத்தமான வேண்டுகோளாக இருக்கிறது. நாங்கள் ஈட்டும் பணத்தைவிட நாங்கள் ஆற்றும் சேவையும், உயிர்காக்கும் பணியும் மகத்தானது என்பது உணரப்படவேண்டும்.

நமது மாநிலத்திலிருந்து கொரோனா தொற்றை அடியோடு ஒழிப்பதற்கு மாண்புமிகு முதல்வரது சிறப்பான முயற்சிகளை நாங்கள் உறுதியாக ஆதரிக்கின்றோம்; எனினும, இந்த தொற்றுப்பரவல் நிகழாமல் தடுப்பதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்கும் மருத்துவர்களும் மற்றும் பிற சுகாதார பணியாளர்களும் மேற்கொள்கின்ற கடின உழைப்பையும், ஓய்வற்ற, நீண்டநேர பணி சுமையையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சுகாதார துறை பணியாளர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்முறை மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்காவிடில், பொது சமூகத்திற்கு சேவையாற்றி இந்த கடும் நோயிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற மனஉறுதியையும், உத்வேகத்தையும் மருத்துவர்களும் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களும் இழந்துவிடக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால், உயிர்க்கொல்லி நோயான இத்தொற்றை கட்டுப்படுத்துவது மிகக்கடினமானதாக மாறிவிடும் என்ற அச்சம் எழுகிறது.

தங்களது கடமைகளை செவ்வனே செய்வதற்கு பாதுகாப்பு உணர்வை நமது சுகாதாரத்துறை பணியாளர்கள் சிறிதும் ஐயமின்றி கொண்டிருப்பதை உறுதிசெய்ய, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் டாக்டர். எஸ். குருசங்கர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Author: ADmiNIstRAtoR