மீண்டும் ஒரு வெற்றியை ருசிப்பாரா அருள்நிதி?

வம்சம்,மௌனகுரு, டிமாண்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் கண்டு வருபவர் அருள்நிதி. சமீபத்தில் ஜீவாவுடன் இவர் இணைந்து நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொரனோ பயத்தினால் திரையரங்கை விட்டு ஒதுக்கியிருந்த ரசிகர்கள், தற்போது தான் திரையரங்குகளின் பக்கம் தலை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் பேமலி ஆடியன்ஸை திருப்திபடுத்தும் விதமாக’ களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் அமைந்தது. ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம்.

இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரம், குற்றம் 23 திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன், இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி.

அஜய் ஞானமுத்துவின் முதல் திரைப்படமான ‘டிமாண்டி காலணி’ யில் நடித்ததை போலவே, அவரின் உதவி இயக்குநர் இன்னிசை பாண்டியனின் முதல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் அருள்நிதி. விக்ரமின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தில் அஜய் ஞானமுத்து உடன் பணியாற்றி வரும் இன்னிசை பாண்டியன் அடுத்ததாக ‘டைரி‘ எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அருள்நிதி நடிக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அருள்நிதியின் கெட்டப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார் படத்தின் இயக்குநர் இன்னிசை பாண்டியன்.

இயக்குநர் அறிவழகன், அஜய் ஞானமுத்துவின் படங்களை போல, இவரின் திரைப்படமும் மாறுப்பட்ட கதையம்சத்துடன் இருக்குமா..? என்கின்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட தொடங்கியுள்ளது.

Author: ADmiNIstRAtoR