இவ்வளவு வேகமா? இன்டர்நெட் ஸ்பீடில் ஜப்பான் படைத்த சாதனை

உலகிலேயே மிக அதிக இன்டர்நெட் வேகத்தை அடைந்து ஜப்பான் புதிய சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் மலைத்து போகும் அளவிற்கு மிக அதிக வேகத்தை அந்த நாடு அடைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு எம்பி டேட்டாவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு டிரான்ஸ்பர் செய்யவே சில நிமிடங்கள் ஆகும் என்ற நிலை இருந்தது. அதன்பின் 2ம் ஜெனரேஷன், 3ம் ஜெனரேஷன் நுட்பங்கள் வர தொடங்கியதை அடுத்து இணையத்தில் டேட்டா டிரான்ஸ்பர் வேகம் எடுத்தது.

தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் இணையத்தில் 5ஜி நுட்பம் டிரான்ஸ்பர் செய்ய பயன்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் இணையம் முழுமையான 5ஜி வேகத்தை அடையவில்லை.

இந்த நிலையில்தான் ஜப்பானில் உலகிலேயே மிக அதிக இன்டர்நெட் வேகம் எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜப்பான் மற்றும் யுகேவில் 178 டிபி வேகம் எட்டப்பட்டது. 1 டிபி என்பது 1,000 ஜிபி ஆகும். 178000 ஜிபி தகவலை ஒரு நொடியில் பரிமாறும் வேகம் கடந்த 2019ல் ஜப்பானிலும், யுகேவிலும் எட்டப்பட்டது.

இதே சாதனை தற்போது ஜப்பானால் முறியடிக்கப்பட்டுள்ளது. 319 டிபி வேகத்தை எட்டி ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு நொடியில் 319000 ஜிபி தகவலை பரிமாற்றம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ( Japan’s National Institute of Information and Communications Technology – NICT) செய்த ஆராய்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் பைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பத்தில் மையத்தில் ஒரே ஒரு பைபர் ஆப்டிக் core வயர் மட்டுமே இருக்கும். அதை சுற்றி கேபிள் பாதுகாப்பு இருக்கும். ஆனால் இந்த ஆராய்ச்சியில் 4 பைபர் ஆப்டிக் கேபிள் core பயன்படுத்தி உள்ளனர்.

இதனால் நினைத்ததை விட வேகமாக டேட்டாக்களை ஜப்பானில் நடந்த இந்த சோதனையில் பரிமாற்றம் செய்துள்ளனர். அதோடு சோதனை முயற்சியாக 3001 தூரத்திற்கு கேபிள் நீளத்தை செயற்கையாக அதிகரித்து சோதனை செய்துள்ளனர். இதில் சின்ன தடங்கல் கூட ஏற்படாமல் 319 டிபி வேகத்தில் டேட்டா டிரான்ஸ்பர் ஆகியுள்ளது.

இந்த கேபிளில் வேகத்தை அதிகரிப்பதற்காக ஆம்ப்ளிபயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பூமியில் கிடைக்கும் மிகவும் அரிதான மினரல்கள் சிலபயன்படுத்தப்பட்டு , அதன்மூலம் புதிய வகை ஆம்ப்ளிபயர் உருவாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே இணையத்தின் வேகம் 319 டிபி வேகம் வரை எட்டியதாக ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே இதுதான் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட மிக அதிக வேகம் ஆகும். உலக நாடுகள் இடையே இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை. அரசு நிறுவன பயன்பாட்டிற்கு எதிர்காலத்தில் இது பயன்படும். நீண்ட தொலைவிற்கு டேட்டாவை வேகமாக அனுப்ப இது உதவும். பெரிய நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சிகளில் டேட்டாக்களை நீண்ட தூரம் டிரான்ஸ்பர் செய்ய இது உதவும்.

சாதாரண மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வேகம் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த தொழில்நுட்பம் 6ஜி தொழில்நுட்பத்தின் வேகத்தை உயர்த்த உதவும். முழுமையாக இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Author: ADmiNIstRAtoR